வில்லன் ரோலை தவறவிட்ட லோகேஷ்
ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆக., 14ல் படம் வெளியாகும் சூழலில் லோகேஷ் அளித்த பேட்டியில், ''மூன்று ஆண்டுகளாக பல நண்பர்கள் என்னை படங்களில் நடிக்க கேட்டார்கள். 'பராசக்தி' படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சுதா அழைத்தார். சிவகார்த்திகேயனும் வாங்க பண்ணலாம் என்றார். கதையும் பிடித்தது. ஆனால் கூலி பட பணியில் இருந்ததால் நடிக்கவில்லை. ஆனால் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார்.
ஹிந்தி படத்திற்கு சாம் சிஎஸ் இசை
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவை தாண்டி பிறமொழிகளிலும் இசையமைக்க துவங்கி உள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் விக்ரம் வேதா ரீ-மேக் படத்திற்கு பின்னணி இசையை மட்டும் அமைத்தார். இப்போது சோனு சூட் நடிக்கும் புதிய படத்திற்கு முழு இசையமைப்பாளராக களமிறங்கி உள்ளார். இதுதொடர்பாக சோனுவை சாம் சந்தித்த படங்கள் வெளியாகி உள்ளன.
யோகிபாபு - பிரம்மானந்தம் சந்திப்பு
நடிகர் யோகிபாபு 'குர்ரம் பாப்பி ரெட்டி' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். மனோகர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தமும் நடிக்கிறார். இதில் நடித்தபோது இவர்களுக்குள் நட்பு உருவானது. பிரம்மானந்தம் வீட்டிற்கு சென்ற யோகிபாபுவிற்கு 'நான் பிரம்மானந்தம்' எனும் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார் பிரம்மானந்தம்.
சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆர்யா
மதராஸி படத்தை அடுத்து பராசக்தி படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். இதன்பிறகு விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க பேசி உள்ளனர். ஹீரோவாக மட்டுமின்றி சிறப்பு வேடம், வில்லனாகவும் நடிக்க தொடங்கி உள்ளார் ஆர்யா.
அரசியலில் விலகினாலும் விமர்சனம்: சிரஞ்சீவி
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, 'பிரஜா ராஜ்ஜியம்' கட்சியை துவக்கி எம்.எல்.ஏ., ஆனார். பின்னர் கட்சியை கலைத்து மீண்டும் நடிப்பில் பிஸியானார். அரசியலில் இருந்து விலகினாலும், அரசியல் தலைவர்கள் உட்பட சிலர் கடுமையான, தவறான கருத்துகளுடன் தன்னை விமர்சிப்பதாகவும், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் சிரஞ்சீவி.