ADDED : ஜூலை 08, 2026 03:55 AM
'அருள்வான் எனக்கு முக்கியமான படம்'
கணேஷ் விநாயன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடித்துள்ள படம் அருள்வான். அருள்நிதி கூறுகையில், இந்த பட தலைப்பில் அருள் என்ற என் பெயர் இருக்கிறது. எனவே நடிக்க யோசித்தேன். இயக்குனரோ பொருத்தமான தலைப்பு என நடிக்க வைத்தார். முதலில் 5 நாட்கள் கால்ஷீட் கேட்டார். பிறகு 10, 15 நாள் ஆனது. என் சினிமா வாழ்வில் அருள்வான் முக்கியமான படம்'' என்றார்.
ரம்யா பாண்டியன் கூறுகையில் ''கிராமத்து படங்கள் பண்ணமாட்டேன் என்ற முடிவில் இருந்தேன். இந்த கதை அந்த முடிவை மாற்றியது'' என்றார்.
'அம்மா' விலிருந்து ரேவதி, பத்மபிரியா விலகல்
'அம்மா' என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரேவதி, பத்மபிரியா ஆகியோர் விலகுவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ''இந்த அமைப்பு தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதை உணர்ந்து கொண்டோம். கோபப்பட்டோ, அவசரப்பட்டோ இந்த முடிவை எடுக்கவில்லை. மலையாள சினிமாவை எப்போதும் நேசிக்கிறோம்'' என தெரிவித்துள்ளனர்.
இயக்குனரானார் ராஜூ ஜெயமோகன்
சின்னத்திரையில் பிரபலமாகி 'பன் பட்டர் ஜாம்' படம் மூலம் ஹீரோவான ராஜூ ஜெயமோகன், இப்போது 'அல்மோஸ்ட் நல்லவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து, இயக்குனராகவும் களமிறங்குகிறார். நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ராஜூ கூறுகையில் ''ஒவ்வொரு மனிதரிடமும் நன்மையும், குறையும் கலந்திருக்கும். டிஜிட்டல் உலகில் வெளிப்படும் ஒருவரின் முகமும், அதைச்சுற்றி நிகழும் எதிர்பாராத திருப்பங்களும் தான் படத்தின் கரு. டார்க் காமெடி வகையை சார்ந்த படம், அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜூன் தாஸ்
நடிகர் அர்ஜூன் தாஸ், 'சூப்பர் ஹீரோ' என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக தேஜூ அஸ்வினி, வில்லனாக சாண்டி நடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் கூறியதாவது ''ஹீரோவுக்கு ஒரு தம்பி. வில்லனுக்கு ஒரு அண்ணன். இவர்கள் இடையேயான உணர்வுப்பூர்வமான விஷயங்கள் தான் கதை. தம்பிக்காக அர்ஜூன் தாஸ் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. செப்டம்பரில் ரிலீஸ்'' என்றார்.
முதல்வர் விஜய் நடித்திருக்க வேண்டிய 3 படங்கள்
மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கி ஹிட்டான 'ரன்' படம் ஜூலை 10ல் ரீ ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி பேசிய லிங்குசாமி, ''ரன் படத்தை முதல்வர் விஜயை வைத்து எடுக்க நினைத்தேன். ஆனால், ஒரு ஹீரோ, நாயகி பின்னால் சுற்றுகிற மாதிரியான படம் வேண்டாம் என அவரது தந்தை சொல்லிவிட்டார். அதேபோல் நான் இயக்கிய 'சண்டக்கோழி, வேட்டை' படங்களின் கதையும் அவரிடம் சொன்னேன். அதுவும் நடக்கவில்லை'' என்றார்.
இளையராஜா குடும்பத்தினரின் 'ராஜாஸ் பிளே லிஸ்ட்'
இளையராஜாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் ஏதேனும் துறையில் கால்பதித்து சாதித்துள்ளனர். அடுத்ததாக அவரது அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இளையராஜாவின் இசைப்பயணத்தை மையமாக கொண்ட அப்படத்தின் கதையை வெங்கட்பிரபு எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு 'ராஜாஸ் பிளே லிஸ்ட்' என தலைப்பு வைத்துள்ளனர். குடும்பஸ்தன் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இயக்குகிறார்.
அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரும் அரசியலுக்கு வரப்போவதாக வலைதளங்களில் செய்தி வைரலானது. அந்த கொடியில் 'எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை' என்று இடம் பெற்றது. இதுபற்றி தனுஷ் தரப்பில் விசாரித்தபோது ''13 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றம் செயல்படுகிறது. பல நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். அவர் அரசியலுக்கு வருகிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளனர். அந்த கொடி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. தனுஷிற்கு அரசியல் ஆசை இல்லை'' என்றனர்.
