மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் முடியும்: 2வது கட்ட பணிகளை 2027ல் முடிக்க இலக்கு
மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் முடியும்: 2வது கட்ட பணிகளை 2027ல் முடிக்க இலக்கு
UPDATED : ஜூன் 18, 2025 09:21 AM
ADDED : ஜூன் 18, 2025 04:00 AM

மதுரை: மத்திய அரசு, ஜப்பானின் ஜெய்க்கா கூட்டுறவு முகமை நிதியின் கீழ் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கான வகுப்பறை கட்டடம், விடுதி கட்டட முதற்கட்ட பணிகள் திட்டமிட்டபடி, 2026 ஜனவரியில் முடிவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம், 'எக்ஸ்' தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில், 2024 மார்ச்சில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. இருகட்டமாக, 2 லட்சத்து 18,927 ச.மீ., பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவ கல்லுாரி, விடுதி கட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், மாணவ, மாணவியருக்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டுக் கூடம் போன்ற கட்டுமானத்தை, 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ரூபாய். ஏற்கனவே தெரிவித்தபடி கட்டுமானம் துவங்கியதில் இருந்து, 18 மாதங்களுக்குள் முதற்கட்டமாக மருத்துவ கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகள் கட்டி முடிக்கப்படும். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந் து உள்ளன.
வரும் 2026 ஜனவரியில் முதற்கட்ட பணி முடிந்துவிடும்; 2027ல் மதுரை எய்ம்ஸ் வளாகம் முழுமை பெறும் என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.