மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி; சுற்றுச்சூழல் அனுமதிகோரி நிர்வாகம் விண்ணப்பம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி; சுற்றுச்சூழல் அனுமதிகோரி நிர்வாகம் விண்ணப்பம்
ADDED : ஜன 31, 2024 06:10 AM

மதுரை : மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
இதில், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.
மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு துவக்கும் வகையில் திட்ட மதிப்பீடு ரூ. 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
ஜப்பானின் ஜெய்க்கா எனப்படும் பன்னாட்டு நிறுவனத்துடன் 2021 மார்ச்சில் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது.
ஆண்டுதோறும் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் படிப்பை தொடர்ந்தனர். 2023 ஆக. 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்ற நிலையில் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது
பத்து தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு, தொற்று நோய் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி பிரமாண்ட கட்டடம் அமைக்கப்படும்.
இதில் மருத்துவக்கல்லுாரி 7 தளங்களுடன் அமையவுள்ளது. பிரம்மாண்ட அரங்கம், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு தனி விடுதி, நூலகம் உட்பட மொத்தம் 2 லட்சத்து 851 சதுரடி பரப்பளவில் இதர வசதிகளுடன் எய்ம்ஸ் வளாகம் கட்டப்படும். மேலும் 4 தளங்களுடன் 30 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவ பிரிவும் அமைகிறது.
மூன்றாவது ஆண்டாக கல்லுாரி சேர்க்கை சமீபத்தில் நடந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்காலிகமாக திருமங்கலம் பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கும் வகுப்பறை மற்றும் விடுதி வசதிக்காகவும் வாடகை கட்டடம் பெறுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.
அடுத்த கட்ட முன்னேற்றமாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இதனால் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.