மாறுகிறது மதுரை மத்திய சிறை: 6 மாதங்களுக்குள் பணியை துவக்க கோர்ட் உத்தரவு
மாறுகிறது மதுரை மத்திய சிறை: 6 மாதங்களுக்குள் பணியை துவக்க கோர்ட் உத்தரவு
ADDED : செப் 09, 2024 02:43 PM

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், '6 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகளும், 3 பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும் திறந்த வெளி சிறைகள், கிளைச் சிறைகள் என 138 சிறைச்சாலைகள் இயங்கி வருகின்றன. 1875ம் ஆண்டில் 31 ஏக்கர் பரப்பளவில் 1252 கைதிகளை அடைக்கும் வகையில் மதுரையில் மதுரை மத்திய சிறைச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது 2379 கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் பெண் சிறை கைதிகளுக்கான தனி வளாகமும் உள்ளது.
மதுரை அரசரடி அருகே உள்ள மத்திய சிறையில் இட நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மதுரை மத்திய சிறையை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. சிறைச்சாலைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து விரைவாக புதிய வளாகத்தை அமைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று (செப்.,9) இந்த வழக்கு விசாரணையின்போது, மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்வது அவசியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'மேலூர் அருகே சிறைக்கான மாற்றிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்' என பதிலளித்தார்.
இதனையடுத்து, 'இடமாற்றம் செய்ய அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில், 6 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலூர் தெற்கு தெரு அருகே செம்பூரில் 170 ஏக்கர் இடம் மதுரை மத்திய சிறைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.