மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்; கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் அறிக்கை
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்; கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் அறிக்கை
ADDED : நவ 10, 2024 07:53 AM
சென்னை ; 'மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 27 கி.மீ., மேம்பால பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ., சுரங்கப்பாதையில், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைகின்றன.
கோவையில், 39 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. மொத்தம், 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள், தமிழக அரசு வாயிலாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை, 936 பக்கத்திலும், கோவை மெட்ரோ திட்ட அறிக்கை, 655 பக்கத்திலும் இருந்தன.
இந்த திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்குமாறு, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மதுரையில் 11,360 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்ப, மத்திய அரசு தெரிவித்தது.
மெட்ரோ மட்டும் இன்றி, லைட் மெட்ரோ, பி.ஆர்.டிஎஸ்., போன்ற பிற போக்குவரத்து திட்டங்களுக்கான விபரங்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையையும் இணைத்து அனுப்பும்படி கூறியது.
இந்த அறிக்கையை ஏற்கனவே நாங்கள் தயாரித்து வைத்திருந்ததால், தற்போது இதையெல்லாம் சரிபார்த்து விட்டோம். இன்னும் ஓரிரு வாரத்தில், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்.
மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக இருப்பதால், நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்றனர்.