ரூ.பல கோடி வரிவிதிப்பு முறைகேடு; மதுரை மாநகராட்சியில் 5 மண்டலம் 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா ஏற்பு
ரூ.பல கோடி வரிவிதிப்பு முறைகேடு; மதுரை மாநகராட்சியில் 5 மண்டலம் 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா ஏற்பு
UPDATED : ஜூலை 10, 2025 04:55 AM
ADDED : ஜூலை 10, 2025 04:54 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக 4 பெண் உட்பட 5 தி.மு.க., மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்களின் ராஜினாமாவை மேயர் இந்திராணி ஏற்றார். இதுதொடர்பாக ஜூலை 7ல் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ததில் 2023, 2024 ஆண்டுகளில் ரூ.பல கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் விசாரித்து 5 பில் கலெக்டர்களை 'சஸ்பெண்ட்' செய்தார். இந்த முறைகேட்டில் மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனரின் பாஸ்வேர்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் அறிக்கை அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொள்ள தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியளித்தார்.
விசாரணையில் மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர், மண்டலம் 3ன் தலைவரின் நேர்முக உதவியாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நகரமைப்பு குழுத் தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி, 5 மண்டலத் தலைவர்களிடமும் விசாரிக்கப்பட்டது.
அமைச்சர் நேரு விசாரணை
இதன் எதிரொலியாக ஜூலை 7ல் அமைச்சர் நேரு மதுரையில் மண்டலம் 2 தலைவர் சரவணபுவனேஸ்வரி, மண்டலம் 3 தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் 4 தலைவர் முகேஷ் சர்மா, மண்டலம் 5 தலைவர் சுவிதாவிடம் விசாரணை நடத்தினார். விளக்கம், ராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டார். நிலைக் குழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமியிடமும் கடிதம் பெறப்பட்டது. அன்று இரவு முதல்வர் மதுரை மாநகராட்சி அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
மண்டலம் 1 தலைவர் வாசுகி கடிதம் அளிக்கவில்லை. கட்சி தலைமை அறிவுறுத்தியதால் நேற்று அவரும் கடிதம் அளித்தார். அனைத்து கடிதங்களையும் மேயர் இந்திராணி ஏற்றதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேரின் பதவி நேற்று முதல் காலியானது. அவர்களின் கவுன்சிலர் பதவி தொடரும்.