மதுரை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்: 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!
மதுரை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்: 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!
ADDED : ஜூன் 14, 2025 06:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய இருவரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன். இங்கு நேற்று இரவு ஏட்டு பால்பாண்டி என்பவர் மட்டும் பணியில் இருந்துள்ளார்.அப்போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அத்துமீறி ஸ்டேஷனுக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த போலீஸ் ஏட்டுவிடம் வாக்குவாதம் செய்த அவர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் நாசமாகின. போலீஸ் ஏட்டுவை அறைக்குள் வைத்து வெளியில் தாழிட்ட அவர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில், போலீஸ் ஸ்டேஷனை சூறையாடியது வி.சத்திரப்பட்டியை சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் என்று தெரியவந்தது.பிரபாகரன் தந்தை முத்துவேல் என்பவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டதாக தவறாக கருதி, இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக, உசிலம்பட்டி டி.எஸ்.பி., தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.