மதுரை பிரபல ரவுடி கொடூர கொலை; தலை சிதைத்து வெறிச்செயல்
மதுரை பிரபல ரவுடி கொடூர கொலை; தலை சிதைத்து வெறிச்செயல்
ADDED : பிப் 20, 2024 09:17 AM

மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர்பாண்டி, 33. இவர் மீது ஆறு கொலைகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி, டூ - வீலரில் நண்பர் கார்த்திக்குடன் திரும்பிக் கொண்டிருந்தார்.
அரவக்குறிச்சி தடா கோவில் அருகே காரில் வந்த கும்பல் வழிமறித்து அவரை வெட்டியது. தப்பி ஓடிய ராமர்பாண்டி கீழே விழுந்தார். அவரை வெட்டிக் கொன்றதோடு, தலையை கொடூரமாக சிதைத்துவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. காயமுற்ற கார்த்திக் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
போலீசார் கூறியதாவது: கடந்த, 2012ல், தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு 'சுமோ' காரில் திரும்பியவர்கள் மீது தன், 'பவரை' காட்ட சிந்தாமணி போலீஸ் அவுட்போஸ்ட் அருகே பெட்ரோல் குண்டுகளை இவர் வீசியதில் ஏழு பேர் இறந்தனர். இதில், முதல் குற்றவாளியாக ராமர்பாண்டி சேர்க்கப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக அனுப்பானடி - தெப்பக்குளம் ரோட்டில் ராமர்பாண்டி தரப்பினர் காரில் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கடந்தாண்டு அனுப்பானடியில், 'பாபி' கார்த்திக் என்பவரை கொலை செய்தது உட்பட ஆறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, மிரட்டல் என, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. பசுபதி பாண்டியன் ஆதரவாளராக இருந்தவர், அவர் மறைவுக்கு பின், தன் பாதுகாப்பிற்காக 'தேவேந்திர குல மக்கள் சபை' என்ற கட்சியை துவக்கினார்.
பெட்ரோல் குண்டு வீசி ஏழு பேரை, 2012ல் கொலை செய்த வழக்கு, பாதுகாப்பு கருதி, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று காலை ஆஜராகிவிட்டு திரும்பியபோது தான், இவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அனுப்பானடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
வீட்டின் பூட்டை உடைத்து 111 பவுன் நகை கொள்ளை
துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே கேம்பலாபாத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி சபீனா, மகன், மகள், கேம்பலாபாத்தில் வசிக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 111 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சொத்துப் பிரச்னை: பெண் படுகொலை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கழனிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 55. இவர் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகள் வசித்த நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இரண்டாவதாக மகேஸ்வரி 48, என்ற பெண்ணை திருமணம் செய்து அதே பகுதியில் வசிக்கிறார்.
காளீஸ்வரிக்கு தங்கேஸ்வரன் 30, என்ற மகன் உள்ளார். தந்தையின் சொத்தில் உரிமை கேட்டு தங்கேஸ்வரன் பிரச்னை செய்து வந்தார். சொத்தை கொடுக்க மகேஸ்வரி இடையூறாக இருப்பதாக நினைத்தார். இந்த ஆத்திரத்தில், நேற்று காலை தனியாக வீட்டில் இருந்த மகேஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தங்கேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
காதல் மனைவி எரித்து கொலை; நால்வருக்கு இரட்டை 'ஆயுள்'
கடலுார் மாவட்டம், ஆதிவராநத்தத்தைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மகள் சீதா, 31, மேல்புவனகிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன், 38, காதல் திருமணம் செய்தவர்கள். சீதா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சரவணன்வீட்டில் ஏற்க மறுத்தனர்.
சிதம்பரம் கடவாச்சேரியில் உள்ள தன் அக்கா கணவர் வெங்கடேசன், 71, என்பவர் வீட்டில் தங்கினர். இந்நிலையில், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது; சீதா மாயமானார். புவனகிரி போலீசார் விசாரித்தனர். கணவர் சரவணன், கணவரின் தாய் செல்வி, 61, சகோதரி சகுந்தலா, 47, அவரது கணவர் வெங்கடேசன், 71, ஆகியோர், சீதாவை கொன்று, எரித்தது தெரிந்தது. சரவணன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் எஸ்.சி., - எஸ்.டி., கோர்ட் நீதிபதி உத்தமராசா, வழக்கை விசாரித்து, நால்வருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
ரூ.2 லட்சம் லஞ்சம்; பி.எப்., நிறுவன அதிகாரி கைது
மத்திய அரசின், புதிய திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, கொரோனா பாதிப்புக்கு பின், வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு பிடித்தம் செய்வதற்கு பதிலாக, மத்திய அரசே அதை வழங்குகிறது.
திருநெல்வேலியில் செயல்படும், 'இன்னோவேடிவ்' எனும் ஐ.டி., நிறுவனம், 3 கோடி ரூபாய் பெற்றது. அதை ஆய்வு செய்த பி.எப்., அமலாக்க அதிகாரி கபிலன், 55, என்பவர், அந்த நிறுவனத்திடம், 3 கோடி ரூபாயில், 5 சதவீதமான 15 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜேக்கப் ஜெபமணி, மதுரையில் உள்ள சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை, திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியில் உள்ள பி.எப்., அலுவலகத்தில் 2 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கும் போது அமலாக்க அதிகாரி கபிலனை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து மதுரை அழைத்துச் சென்றனர்.
அலெக்ஸி நவால்னி உடலில் காயம்
ரஷ்யாவில், மர்மமான முறையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண் போலீசாரை சிறை வைத்த சூதாட்ட கும்பல்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தலசாரி கடற்கரை போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக சம்பாபதி சோரன் என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவர், மற்ற கான்ஸ்டபிள்களுடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றார்.
அப்போது, உதய்பூர் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அங்கு ரெய்டு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சிலர், கும்பலாக சூழ்ந்து அவர்களை சுற்றி வளைத்தனர். மேலும், பெண் இன்ஸ்பெக்டர் சம்பாபதி சோரன் மற்றும் அவருடன் சென்ற மூன்று பெண் கான்ஸ்டபிள்களையும் அங்குள்ள ஓர் அறையில் அடைத்து வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

