தாய்லாந்திற்கு நேரடி விமான சேவை மதுரை பயணியர் எதிர்பார்ப்பு
தாய்லாந்திற்கு நேரடி விமான சேவை மதுரை பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : டிச 18, 2024 12:40 AM
'மதுரை மற்றும் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் இடையே, நேரடி மற்றும் தினசரி விமான சேவையை துவக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது.
சுற்றுலா பயணியர் அதிகம் விரும்பும் நாடாக தாய்லாந்து உள்ளது. இங்குள்ள பழமையான கோவில்கள் மற்றும் தீவுகளை சுற்றிப் பார்க்கவும், பாரம்பரிய உணவுகளை ருசிக்கவும், ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.
சிரமமுமின்றி பயணம்
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து தாய்லாந்து செல்ல, நேரடி மற்றும் தினசரி விமான சேவை உள்ளது.
தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், சுற்றுலா மற்றும் வணிகம் தொடர்பாக செல்வோர், எவ்வித சிரமமுமின்றி பயணம் செய்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில், சென்னையில் உள்ளதை போல, தினமும் நேரடி விமான சேவை, மற்ற விமான நிலையங்களில் இல்லை. எனவே, மதுரையில் இருந்து தாய்லாந்துக்கு, நேரடி மற்றும் தினசரி விமான சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
மதுரையில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் செல்ல, பொதுவாக, 3:30 முதல், 4:00 மணி நேரமாகும். நேரடி விமான சேவை இல்லாததால், சென்னை அல்லது மற்ற நகரங்களுக்கு சென்று மாற வேண்டியுள்ளது.
நடவடிக்கை
இதனால், குறைந்தது 10 மணி நேரமாகிறது. பஸ், ரயில்களில் சென்னை சென்று, அங்கிருந்து நேரடியாக செல்ல வேண்டும். இதனால், எங்களுக்கு நேரமும் வீணாகிறது, விமான கட்டணமும் அதிகமாகிறது.
தொழில் நிறுவனங்கள், முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்படும் நகரமாக விளங்கும் மதுரையில் இருந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, தினசரி மற்றும் நேரடி விமான சேவையை வழங்க, விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும், இதற்கு விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -