ADDED : ஏப் 27, 2025 01:12 AM

திருப்பூர்:அமெரிக்காவில் நடைபெற உள்ள 'மேஜிக்' சர்வதேச ஜவுளி கண்காட்சி, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லாஸ்வேகாஸ் நகரில் உள்ள வர்த்தக கண்காட்சி மையத்தில், வரும் ஆக., 18ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. கடந்தாண்டு நிலவரப்படி, உலக நாடுகளில் இருந்து, 7.11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அமெரிக்கா, ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா மட்டும், கடந்தாண்டில், 41 ஆயிரத்து, 930 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்தது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) நிர்வாகிகள் கூறியதாவது:
அமெரிக்க வரி உயர்வால், இந்தியா அதிகம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதலான ஆர்டர்களை பெற முடியும். ஏ.இ.பி.சி., மூலம், அரசு மானிய உதவியுடன் கண்காட்சியில் பங்கேற்க, www.aepcindia.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.