ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்பு
ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கோலாகலம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்பு
ADDED : மார் 09, 2024 07:48 AM

தொண்டாமுத்தூர் : கோவை ஈஷா யோகா மையத்தில், நேற்று 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைத்தார்.
முன்னதாக, ஈஷா மையத்துக்கு வருகை தந்த துணை ஜனாதிபதியை, ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்ய குண்டத்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தன் மனைவி சுதேஷ் உடன், தீபமேற்றி வழிபட்டார்.
அதன்பின், நந்திக்கு மாலை அணிவித்து வழிபட்டார். தியானலிங்கத்தில், ஜக்கி வாசுதேவ் நிகழ்த்திய பஞ்சபூத கிரியாவில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி நடந்த ஆதியோகி சிலையின் முன் வந்தார். அங்குள்ள யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டு, 'மஹா யோகா யக்னா' தீபத்தை ஏற்றி, மஹா சிவராத்திரி விழாவை துவக்கி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.
இவ்விழாவில், தமிழக கவர்னர் ரவி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா கவர்னர் இந்திரசேனா ரெட்டி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசுகையில், “இது, 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா. 1994ம் ஆண்டு, 70 பேர் மட்டும் இருந்தோம். ஒரு பெண்மணி மட்டும் இருந்தார். அவரை சென்னை பாட்டி என்று அழைத்தோம். அவர், இரவு முழுவதும், இரண்டே பாடல்களை பாடிக்கொண்டிருப்பார். அவரது பக்தி மெய்சிலிர்க்க வைக்கும். கடந்தாண்டு, ஈஷா மஹா சிவராத்திரி விழாவில், நேரிலும், சமூக வலைதளம், டி.வி., வாயிலாகவும் என, 145 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு, உலகம் முழுவதும், 200 மில்லியன் மக்கள் கலந்து கொண்டிருப்பார்கள்,” என்றார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: ஈஷா மஹா சிவராத்திரி விழாவில், பங்கேற்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக உணர்கிறேன்.
நம் பாரத கலாசாரத்தில், மஹா சிவராத்திரி விழா, மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும், ஈஷாவில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது. ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
மதம், மொழி, இனம், தேசம், கலாசாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது.
அத்துடன் ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என, நான்கு மார்க்கங்களிலும் யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார்.
மனித குல நல்வாழ்விற்காக, அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள் மற்றும் தமிழக, கர்நாடக, வடமாநில இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.