'சர்வர்' பிரச்னையால் அஞ்சல் சேவை ஸ்தம்பிப்பு 6 நாட்களாக வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு
'சர்வர்' பிரச்னையால் அஞ்சல் சேவை ஸ்தம்பிப்பு 6 நாட்களாக வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு
ADDED : ஆக 09, 2025 11:55 PM
சேலம்:'சர்வர்' பிரச்னையால் அஞ்சல் சேவை ஸ்தம்பித்து, சேவை பெறுவதில் ஆறு நாட்களாக வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
தரம் உயர்வு தமிழக அஞ்சல் துறை சேவையை விரைவு படுத்த, அதன் மென்பொருள், ஏ.பி.டி., - 2.0 - அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி, தொழில்நுட்பத்துக்கு தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு கடந்த, 2ல், 'பரிவர்த்தனை இல்லாத நாள்' என அறிவித்து, அன்று அனைத்து அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டு, புதுமென்பொருள் புகுத்தி தரம் உயர்த்தப்பட்டு, 4ல் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன்படி சேலம் கிழக்கு, மேற்கு கோட்டங்களில் உள்ள, 515 அஞ்சலகங்களிலும் புதுமென்பொருள் சேவை செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், அதை இயக்குவதற்கான, 'சர்வர்', ஆமை வேகத்தில் இயங்குவதால், அஞ்சல் சேவை முடங்கி, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
பதிவு, விரைவு தபால், பார்சல், சர்வதேச பார்சல், மணியார்டர் உள்ளிட்டவற்றை உடனே, 'புக்கிங்' செய்ய முடியாத நிலை உள்ளது.
காத்திருப்பு அவற்றை, 'டெலிவரி' செய்வதிலும் அதே பிரச்னை நீடிப்பதால், ஆறு நாட்களாக அஞ்சல் சேவை ஸ்தம்பித்து, வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
அலுவலர்களும் பதில் அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக சேலம் கலெக்டர் அலுவலக அஞ்சலகத்தில் பணப்பரிவர்த்தனை கூட செய்ய முடியாத அளவுக்கு, 'சர்வர்' பிரச்னை நிலவுகிறது.
அதேபோல் பெரும்பாலான அஞ்சலகங்களில், இந்த இடையூறு நிலவுவதாக, ஊழியர்களே புலம்புகின்றனர். 'சர்வர்' கோளாறால், கணினியில் எந்த விபரங்களையும் உடனே பதிவேற்ற முடியவில்லை.
தமிழகம் முழுதும் இந்நிலை தொடர்வதால், தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளை, பெருகி வரும் சேவைக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் கூறுகையில், ''ஒட்டுமொத்த, 'சர்வர்' மையம், மைசூரில் உள்ளது. அங்கு தகவல் தெரிவித்து, எங்கள் தொழில்நுட்ப குழுவினர் மூலம், கோளாறு படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
''இன்னும், ஏழு முதல், 10 நாட்களில், 'சர்வர்' பிரச்னை சரிசெய்யப்படும். அதுவரை, வாடிக்கையாளர்கள் சிரமத்தை தவிர்க்க, 'மேனுவல்' மூலம், அஞ்சல் சேவை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.