மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
ADDED : பிப் 12, 2026 04:30 AM

புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவான் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்த சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் மற்றும் 80 அடி உயர மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு கிலோ எள், ஒரு மீட்டர் காடா துணி, ஒரு கிலோ கற்பூரம், பூஜை பொருட்கள் மற்றும் தட்சணை என ரூ.3,000யை கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

