அதிகாரிகளை ஆன்லைன் வாயிலாக பங்கேற்க வைப்பதா?: இ.பி.எஸ்., கேள்விக்கு அரசு பதில்
அதிகாரிகளை ஆன்லைன் வாயிலாக பங்கேற்க வைப்பதா?: இ.பி.எஸ்., கேள்விக்கு அரசு பதில்
UPDATED : மே 16, 2024 05:51 PM
ADDED : மே 16, 2024 02:27 PM

சென்னை: 'காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றால் போதும் என தமிழக அரசு முடிவு எடுத்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் நேரில் தான் பங்கேற்றாக வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைனில் மட்டுமே பங்கேற்க உத்தரவிடவில்லை என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., கூறியதாவது: கடந்த முறை டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, மேகதாது அணை கட்டுமான பிரச்சனையை மத்திய நீர்வளத் துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது.
வாக்குமூலம்
அதை அப்போதே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத் துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத் துறை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கபட நாடக திமுக
மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டிய இந்த ஏமாற்று மாடல் அரசு, இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது. தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசின் கால்களில் அடமானம் வைத்துவிட்டு, தங்களது குடும்பத்தினருடைய தொழில்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்த நினைக்கும் இந்த கபட நாடக திமுக அரசை கடுமையாகக் கண்டிக்கிறேன்.
டில்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதில்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைனில் மட்டுமே பங்கேற்க உத்தரவிடவில்லை. காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
கூட்டங்களில் கலந்து கொள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுகிறது. கூட்டங்களில் அதிகாரிகள் நேரில் பங்கேற்று தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.