பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்துவது பாலியல் துன்புறுத்தலே: ஐகோர்ட்
பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்துவது பாலியல் துன்புறுத்தலே: ஐகோர்ட்
ADDED : ஜன 24, 2025 03:19 AM

சென்னை : பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும், ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலே என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர்.
அந்தக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு வழங்கக்கூடாது என, பரிந்துரை செய்தது.
ரத்து செய்தது
இதை எதிர்த்து, மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'தன் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க, எந்த வாய்ப்பும் வழங்காமல், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், விசாகா குழு பரிந்துரையை ரத்து செய்தது. இதை எதிர்த்து, தனியார் மென்பொருள் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனம் தரப்பில், 'குற்றம் சாட்டப்பட்ட நபர், பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில், பின்னால் நின்று அவர்களை தொட்டுப் பேசுவது, கைகுலுக்க கூறுவது, உடை அளவு கேட்பது என, தொல்லை கொடுத்துள்ளார்.
விசாகா குழு இயற்கை நீதிகளுக்கு உட்பட்டே விசாரணை நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும், சம்பந்தப்பட்ட நபரின் செயல், தங்களுக்கு மனதளவிலும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்' என, வாதிடப்பட்டது.
பின்னால் நிற்கவில்லை
சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன், அவர்களின் பின்னால் நிற்கவில்லை. அந்த பெண்கள் செய்யும் பணிகளை, அவர்களின் பின்னால் நின்று கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும், ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலே. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, விசாகா குழு அளித்த பரிந்துரைகள் செல்லும்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க வழிவகை செய்யும் சட்டம், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு நடத்தையை எப்படி உணருகின்றனர் என்பதை முதன்மைப்படுத்துகிறது.
துன்புறுத்துவோரின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி, இந்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

