ADDED : ஜன 18, 2024 05:27 AM

மதுரை : மதுரையில் சட்ட விரோதமாக மது விற்கும்படி வற்புறுத்தி, ஜி-பே மூலம் போலீஸ்காரர் மாமூல் வாங்கிய விவகாரத்தை விசாரணை அதிகாரி மூலம் விசாரிக்க போலீஸ் கமிஷனருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை காமராஜபுரம் சஞ்சய்குமார். இவர் உட்பட சிலரிடம் 2023 செப்.,4 ல் கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக, மதுரை தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர். சஞ்சய்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர் அப்பாவி. சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. மனுதாரரின் சகோதரர் கவியரசனிடம் மது விற்பனை செய்து தனக்கு மாமூல் கொடுக்கும்படிபோலீஸ்காரர் பாண்டி வற்புறுத்தினார்.
ஒரு கட்டத்தில் மது விற்று பணம் கொடுக்க கவியரசன் மறுத்துவிட்டார். இதனால் மனுதாரர் மீது போலீசார் பொய் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்ட மற்ற 2 பேரிடம் மட்டுமே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மனுதாரரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்படவில்லை. கவியரசன், ஜி-பே மூலம் பாண்டிக்கு 2000 ரூபாயை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பாண்டி அளித்த விளக்கத்தின் அடிப்படையில் விசாரணை முடிக்கப்பட்டது.
சம்பவத்திற்கு ஒரு நாள் முன் மனுதாரருக்கு பாண்டி டூவீலரில் 'லிப்ட்' கொடுத்து அழைத்துச் சென்றார். மறுநாள் மனுதாரர் காவலில் வைக்கப்பட்டார். இதற்கு ஆதாரமாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைத்துள்ளன.
பாண்டிக்கு மனுதாரரின் சகோதரர் பணம் கொடுத்தது தொடர்பாக மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அரசு தரப்பு: மனுதாரரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
நீதிபதி: போலீஸ்காரர் பாண்டி, மனுதாரரின் சகோதரரிடம் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும்படி வற்புறுத்தி, அவரிடமிருந்து மாமூல் பெற்றதாக தெரிகிறது. அவர் ஜி- பே மூலம் பாண்டிக்கு 2000 ரூபாயை செலுத்தியுள்ளார். இதை ஒப்புக் கொண்டு பாண்டி அளித்த விளக்கத்தை ஏற்று புகாரை தெப்பக்குளம் போலீசார் முடித்து வைத்துள்ளனர். மனுதாரரை கைது செய்வதற்கு ஒருநாள் முன், அவருக்கு டூவீலரில் பாண்டி 'லிப்ட்' கொடுத்துள்ளார். இதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிக்கு தொடர்பு இருந்தது தெளிவாகிறது. போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., முழு விசாரணை அறிக்கையையும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். அவர் ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் 6 வாரங்களில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமின் வழங்க விரும்பவில்லை; தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.