வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி; காட்டு யானை மீது பழி போட்ட 13 பேர் கைது!
வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி; காட்டு யானை மீது பழி போட்ட 13 பேர் கைது!
UPDATED : ஜன 28, 2025 08:04 PM
ADDED : ஜன 28, 2025 07:59 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலையில், வேட்டைக்கு சென்ற இடத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். அவரை காட்டு யானை மிதித்து கொன்று விட்டதாக, நாடகம் ஆடிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை அருகே, கடந்த 25ல், ஜம்ஷித் என்பவர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, நண்பர்கள் நான்கு பேர் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வந்தனர். ஆனால், போலீஸ், வனத்துறையினர் விசாரணையில், யானை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் அந்த இடத்தில் இல்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. கிடுக்கிப்பிடி விசாரணையில் வன விலங்கு வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.குண்டு பாய்ந்து அவர் இறந்ததை மறைக்கும் நோக்கத்தில், காட்டு யானை தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வாலிபர் உடலில் பாய்ந்த குண்டை, அவர்களே பிதுக்கி வெளியே எடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஜம்ஷித்துடன் வேட்டைக்கு சென்ற நவுஷாத், ஜாபர் அலி, சதீஷ், ஐதர் அலி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3 நாட்டுத் துப்பாக்கி கன், 2 கார்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.