ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதியை நோக்கி அரிவாள் வீசியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதியை நோக்கி அரிவாள் வீசியவர் கைது
UPDATED : பிப் 17, 2026 06:26 AM
ADDED : பிப் 17, 2026 04:25 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்குள் நேற்று காலை புகுந்து நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசிய பாலமுருகனை 36 போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் செங்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இன்ஜினியரிங் படித்துள்ள இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவி தங்க முனீஸ்வரி பிரிந்து சென்றுவிட்டார். வாழ்க்கை பராமரிப்பு செலவு தொகை கோரி ஸ்ரீவில்லிபுத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, கூடுதல் பொறுப்பு வகிக்கும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் விசாரிக்கிறார். இன்று (பிப்.17) உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 14 நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்ற சுவரை ஒட்டியுள்ள கண்மாயை கடந்து சென்றால் பாலமுருகன் வீடு உள்ளது. நேற்று காலை தனது வீட்டில் இருந்து கண்மாய் வழியாக நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதிக்கு பாலமுருகன் வந்துள்ளார். அங்கு மர ஸ்டூல் ஒன்றை போட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து காலை 11:30 மணிக்கு தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
நீதிமன்ற அறையின் கிழக்கு பக்க வாசலில் நின்ற பாலமுருகன், தான் கொண்டு வந்த பையில் இருந்து 2 அடி நீள ஒரு அரிவாளை எடுத்து, ''என் ஊரிலேயே கோர்ட்டை நடத்திக் கொண்டு, எனக்கு எதிராக தீர்ப்பு சொல்வாயா'' என கூறிக்கொண்டே நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசினார். அது வழக்கறிஞர்கள் மேஜையில் பட்டு தரையில் விழுந்தது.
நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த போலீசார்கள் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் நீதிமன்றத்தில் குவிக்கப்பட்டனர். ஒரு மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12:30 மணிக்கு வழக்கம் போல் நீதிமன்றம் செயல்பட துவங்கியது.
சம்பவ இடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பார்வையிட்டு நடந்தது குறித்து நீதிபதியிடமும், நீதிமன்ற ஊழியர்களிடமும் விசாரித்தார். எஸ்.பி. கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு முதன்மை மாவட்ட நீதிபதியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.
நீதிமன்ற சிரஸ்தார் முருகையா புகாரில், பாலமுருகன் மீது 4 பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

