UPDATED : நவ 23, 2026 10:30 PM
ADDED : நவ 23, 2026 10:30 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பூவரசன், 29. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும், 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள வாணி டெக் என்ற தனியார் தோல் தொழிற்சாலையில், தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவு நீர் பம்ப் அறையில் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில், நேற்று காலை தொழிலாளர்கள், டூயூட்டியை மாற்ற சென்றபோது பூவரசனை காணாமல் திடுக்கிட்டனர். சக தொழிலாளர்கள் தேடியபோது கழிவு நீர் தொட்டியில் அவர் கை மட்டும் மிதந்த நிலையில் மேலே தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவரை சடலமாக மீட்டு, வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
