ADDED : பிப் 01, 2026 03:42 AM
புதுடில்லி: வடகிழக்கு டில்லியில், 12 வயது வளர்ப்பு மகனை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
டில்லி சாஸ்திரி பார்க்கை சேர்ந்தவர் வாஜித் கான்,36. மின்சார ரிக்ஷா டிரைவர். கணவனை இழந்த பெண்ணை, 2020-ல் திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகள் விடுதியிலிருந்து வீடு திரும்பினர். குழந்தைகள் வந்ததில் இருந்து, சில மாதங்களாக வீட்டில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் மகனான ஏழாம் வகுப்பு படித்த, 12 வயது சிறுவன், 29ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின் விளையாட சென்றான். ஆனால், வீடு திரும்பவில்லை.
சாஸ்திரி பார்க் சவுக் லுாப் அருகே பலத்த காயங்களுடன் நேற்று முன் தினம் காலை இறந்து கிடந்தான். உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொடூரமாக தாக்கப்பட்டதால் சிறுவனுக்கு தலை, கண்களில் பலத்த காயங்கள் இருந்தன.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், வாஜித் கானை நேற்று கைது செய்தனர். தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து, சிறுவனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.

