பைக்கில் வேகமாக சென்றவர்களை தட்டி கேட்டவருக்கு சரமாரி 'வெட்டு'
பைக்கில் வேகமாக சென்றவர்களை தட்டி கேட்டவருக்கு சரமாரி 'வெட்டு'
ADDED : அக் 23, 2025 12:44 AM

துாத்துக்குடி: பனிமய மாதா சர்ச் வளாகத்தில், வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் இன்பெண்ட் ரோசஸ், 26. கப்பலில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு சர்ச் அருகே நின்று கொண்டிருந்தபோது சிலர் பைக்கில் அதிவேகமாக சென்றனர்.
'ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் ஏன் வேகமாக செல்கிறீர்கள்' என, அவர்களிடம் இன்பெண்ட் ரோசஸ் கேட்டார். போதையில் இருந்த அந்த வாலிபர்களில் சிலர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் பைக்கில் வந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் 20 வாலிபர்கள் பனிமய மாதா சர்ச் வளாகத்தில் நின்று கொண்டிருந்த இன்பெண்ட் ரோசசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கத்தி, அரிவாளுடன் வந்த அவர்கள், இன்பெண்ட் ரோசசை வெட்ட முயன்றனர். அவர் தடுக்க முயன்றதில் வலது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. சர்ச் வளாகத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அனைவரும் பைக்கில் தப்பினர். காயமடைந்த இன்பெண்ட் ரோசசை மீட்ட மக்கள், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்ச் தெருவை சேர்ந்தவர்கள், தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சர்ச் வளாகத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து வாலிபரை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.