ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று வீட்டின் முன் மங்கல கோலமிட வேண்டும்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று வீட்டின் முன் மங்கல கோலமிட வேண்டும்
UPDATED : ஜன 09, 2024 11:43 AM
ADDED : ஜன 09, 2024 01:41 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேச்சு:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான புனித அட்சதையை, தமிழகம் முழுக்க 1 கோடி இல்லங்களின் பூஜை அறைகளுக்கு கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று, ஒவ்வொருவரும் வீட்டிற்கு முன் மங்கல கோலமிட வேண்டும். அனைவரும் இணைந்து, ஸ்ரீராம ஜெயத்தை பாராயணம் செய்வதோடு, நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட வேண்டும்.
பொதுவாகவே மார்கழி, தை மாதங்களில் வீட்டு வாசலில் வண்ணமயமாக கோலமிடும் தமிழ் பெண்கள், ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்னைக்கும் நிச்சயம் அசத்திடுவாங்க!
என்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிக்கை: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான புவி ஈர்ப்பு விசையில்லா ஒளிவட்ட சுற்றுப் பாதையில், திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாறு படைத்துள்ளனர்.
விண்வெளி ஆய்வில், இந்தியாவை இமயமாக உயர செய்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 2021 சட்டசபை தேர்தலில், கைமேல் கட்சிகள் காத்திருந்த போதும், திட்டமிட்டே பலவீனமான கூட்டணியை அமைத்து, அதன் வழியே தி.மு.க., ஆட்சிக்கு வர உதவிய பழனிசாமி, இப்போதும் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் ஒருமுகமாகி விடாமல் தடுக்கவே, மூன்றாவது அணி அமைக்கிறார். ஆக பேரங்களோடு செயல்படும், தி.மு.க.,வின் பினாமி தான் பழனிசாமி என்பதை காலம் உணர்த்தும்.
பழனிசாமிக்கு எதிரா டிசைன் டிசைனா அறிக்கை வெளியிடுறது தான், பன்னீர்செல்வம் இவருக்கு கொடுத்துள்ள, 'அசைன்மென்ட்' போல!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழர்கள் சபரிமலைக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், கேரள காவல் துறையினர் தங்களை தாக்குவதாக, தமிழக அய்யப்ப பக்தர்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. சபரிமலையில் ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசு, தமிழக மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது; இதை தமிழக அரசு தட்டி கேட்க வேண்டும்.
சரியா போச்சு... திராவிட மாடல் ஆட்சியாளர்களும், தமிழக பக்தர்களிடம் அதையே தான் கேட்பாங்கன்னு இவருக்கு தெரியாதா?