எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
ADDED : நவ 05, 2025 01:59 AM

சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன். 30 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வில் எம்.பி., - எம்.எல்.ஏ., என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டபோது, பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.
மனோஜ் பாண்டியன், நேற்று காலை அறிவாலயம் சென்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
பின், மனோஜ் பாண்டியன் அளித்த பேட்டி: 'பா.ஜ.,வுடன் எந்த சூழலிலும் கூட்டணி வைக்க மாட்டேன்' என கூறிவிட்டு, எந்த அடிப்படையில் மீண்டும் பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி வைத்தார் என்பதற்கு, எந்த பதிலும் இல்லை. தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றவே, பழனிசாமி அ.தி.மு.க.,வை அடகு வைத்துள்ளார். எனவே, திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு உன்னத தலைவன் கீழ் செயல்பட விரும்பி, தி.மு.க.,வில் இணைந்து விட்டேன்.
இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.
நேற்று மாலை தன் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வழங்கினார். இவரது ராஜினாமாவால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.

