சீசன் துவங்குவதால் காற்றாலைகளில் அதிக மின்சாரம் முழுதும் பயன்படுத்த உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
சீசன் துவங்குவதால் காற்றாலைகளில் அதிக மின்சாரம் முழுதும் பயன்படுத்த உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 08, 2025 10:25 PM
சென்னை:'தமிழகத்தில் இம்மாதம் காற்றாலை சீசன் துவங்குவதை முன்னிட்டு, சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து, தினமும் 1,000 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தை வீணடிக்காமல் முழுதுமாக பயன்படுத்த வேண்டும்' என, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கம், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, தனியார் நிறுவனங்கள் 9,331 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில், 60 சதவீதம் சொந்த மின் பயன்பாட்டிற்காகவும், 40 சதவீதம் மின் வாரியத்திற்கு விற்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
தென்மேற்கு பருவ காற்று
சில நிறுவனங்கள், 2,030 மெகா வாட் திறனில், காற்றாலைகள் அமைத்து, பிற மாநிலங்களுக்கு செல்லும், மத்திய மின் தொடரமைப்பு கழகத்தின், மின் வழித்தடத்தில் இணைத்துள்ளன.
இதனால், அந்த மின்சாரம் தமிழக கணக்கில் சேராது. மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட் மேல் கிடைக்கும்.
ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை, சராசரியாக, 3.10 ரூபாய்க்கு மின் வாரியம் வாங்குகிறது. கடந்த 2024 ஜூலை 30ல், 5,899 மெகா வாட் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலையில் கிடைத்த அதிகபட்ச அளவு. கடந்த மாதம் வரை காற்றாலைகளில் இருந்து, 500 மெகா வாட் குறைவாக மின்சாரம் கிடைத்தது.
இம்மாதம் சீசன் துவங்குவதால், கடந்த சில தினங்களாக, 1,000 மெகா வாட் மேல் கிடைக்கிறது. நேற்று முன்தினம், 1,380 மெகா வாட் கிடைத்தது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவ மழை காலம் அந்தமானில், வரும் 13ம் தேதி துவங்க இருக்கிறது. கேரளாவில், 25ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை துவங்கும். இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று துவங்குவதால், காற்றாலைகளில் இனி அதிக மின்சாரம் கிடைக்கும்.
பராமரிப்பு பணி
நடப்பு சீசனில் இயற்கையாக கிடைக்கும், காற்றாலை மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்கு, காற்றாலைகள் இணைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையங்கள், மின் வழித்தடம், டிரான்ஸ்பார்மரில், முழுவீச்சில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சீசனில், காற்றாலைகளில் வழக்கத்தை விட அதிக மின்சாரம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அந்த மின்சாரத்தை பயன்படுத்த, ஏற்கனவே இருந்தது போல், ஜூன் முதல் அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.