எத்தனையோ எதிர்ப்புகள் வரும்... ஹிந்து மதம் வளரும்!
எத்தனையோ எதிர்ப்புகள் வரும்... ஹிந்து மதம் வளரும்!
UPDATED : ஆக 27, 2024 11:17 AM
ADDED : ஆக 26, 2024 03:28 PM

யார் ஏற்பாடு செய்தார்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழநியில் நடந்து முடிந்தது. இதில், நாம் எதிர்பார்த்தது போலவே சிலர் இந்த வெற்றியையும், ஆயிரக்கணக்கான மக்கள் மாநாட்டுக்கு வந்ததையும் பொறுக்க முடியாமல், கத்துகிறார்கள், கதறுகிறார்கள். திரும்பவும் நாம் எதிர்பார்த்தது போலவே, கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணனும், விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமாரும் பழநி மாநாட்டுக்கு எதிராக பொங்குகிறார்கள், புளுங்குகிறார்கள், மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஹிந்துக்கள் வந்ததையும், நம்நாட்டு ஹிந்துக்கள் முருகன் அருளை பெற்றதையும் இவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை.
கம்யூ., பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை. எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரவிக்குமார், விசிக
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அறிக்கையில், ''மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி நடத்தப்படும் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்குவது, மாணவர்களுக்கு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிக பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை' ஆகிய தீர்மானங்கள் கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ., அரசின் ஹிந்துத்துவ செயல்திட்டத்தை, முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சி. இது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது, கண்டனத்துக்குரியது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாலகிருஷ்ணன்களும், ரவிக்குமார்களும் ஹிந்து பெயரை வைத்துக்கொண்டு ஹிந்து உணர்வுக்கு எதிராகவே பேசி வருகிறார்கள். ஹிந்து மதத்திற்கு எதிராக இருக்கும் இவர்கள் எதற்காக இன்னமும் ஹிந்து பெயர்களை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்?. பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே!. ஏன் இவர்கள் ஹிந்து பெயர்களிலேயே நடமாடுகிறார்கள் என்றால், அது ஹிந்துக்களை ஏமாற்ற.. அப்பாவி ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக..
உண்மையில் இவர்களுக்கு தைரியம் இருந்தால், ஹிந்து பெயர்களை மாற்றிவிட்டு வேறு பெயர்களை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே!. அவர்களிடம் கேட்டால் அப்பா, அம்மா வைத்த பெயர்கள் என கதை விடுவார்கள். பிறந்தபோது உங்களுக்கு வைத்த பெயர்களை இப்போது மாற்றுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம். தைரியம் இருந்தால் மாற்றிதான் பாருங்களேன்!
உண்மை தெரியாதா
 
உண்மை தெரியாமலோ அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருப்பதாலோ இவர்கள் முருகன் மாநாட்டை எதிர்ப்பது போல காட்டிக்கொள்கிறார்கள். முதலில் இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்தவில்லை என்பதை இவர்களை போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முருகன் மாநாட்டுக்கு அரசு தரப்பில் ஒரு நயா பைசா கூட செலவிடப்படவில்லை. எப்போதெல்லாம் ஏதாவது கோவில் பிரச்னை ஏற்படும்போதோ, கும்பாபிஷேகம் நடக்கும்போதோ, முதல்வர் உள்பட அமைச்சர்கள் கூறுவது, 'இது திராவிட மாடல் அரசு' என்பதுதான். ஆனால், உண்மையில் கோவில்களுக்கு ஆகும் செலவு, கோவில்களின் வருமானம் அல்லது நன்கொடைகள் மூலமாகதான் செய்யப்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சம்பளத்தை மட்டுமே அரசு தருகிறது. மற்றபடி அனைத்து துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும் இருந்து அரசுக்கு தரப்படும் 12 சதவீத பங்கில் இருந்துதான் சம்பளம் தரப்படுகிறது. கோவில் வருமானத்தில் இருந்து தான் கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.
கோவில்களுக்கு வருவாய் எப்படி கிடைக்கிறது?
 
இந்த வருவாய் எல்லாமே ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், ஹிந்து மத உருவ வழிபாட்டை பின்பற்றுபவர்கள், சிலை தான் கடவுள் என நம்புபவர்கள், அபிஷேகத்திற்கும், அர்ச்சனைகளுக்கும், தரிசனங்களுக்கும் தரும் கட்டணம் தான் இந்த வருவாய். இந்த பணம் தான் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்று அங்கிருந்து சம்பளத்திற்கும் மற்ற விழாக்களுக்கும் செலவிடப்படுகிறது. எனவே இவர்கள் கத்துவதற்கும், கதறுவதற்கும் இது அரசு பணமல்ல.
வருவாய் அதிகம் உள்ள கோவில்கள், கல்லூரிகளையும், பள்ளிகளையும் நடத்துகின்றன. இதுவும் கோவிலை நிர்வகிப்பவர்கள் ஹிந்து மதத்திற்கும், பக்தர்களுக்கும் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஹிந்துக்கள் தரும் பணம். அதனால், கல்வியை காவிமயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை.
அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெறும், சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான், தங்களது மத நம்பிக்கைகளை, பள்ளி அசம்ப்ளிகளிலும், நீதி நெறிமுறை வகுப்புகளிலும் பரப்புகிறார்கள். தமிழகத்தில் பாலகிருஷ்ணன்களும், ரவிக்குமார்களும் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுவது புதிதல்ல. இவர்களை விட, பெரிய பெரிய ஆட்களை எல்லாம் பார்த்துவிட்டு வளர்ந்ததுதான் ஹிந்து மதம். இனிமேலும் இவர்களை போன்றவர்கள் வந்தாலும், போனாலும் ஹிந்து மதம் மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கும். அது முருகனின் அருள்!
- இடும்பன்

