
திருப்பாவை - பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து
உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம்
எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி
கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம்.
சக்கர வடிவில் வந்த சகடன் என்ற
அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம். கன்று வடிவில்
வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன்
மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம்
உண்டாகட்டும்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன்
அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு
தலைவணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள
வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப்
பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது
இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
திருப்பள்ளியெழுச்சி - பாடல் 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பொருள்
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப்
பொழுதில் வீணைக் கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி
ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால்
உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன்
சிறப்பைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
'நமசிவாய' என்ற நாமத்தை
சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள்.
வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து
நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி
நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது
பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்
சாதாரணம். எனது இறைவனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.