பட்டியலின இளைஞருடன் திருமணம்; மகளை கொலை செய்து எரித்த தந்தை
பட்டியலின இளைஞருடன் திருமணம்; மகளை கொலை செய்து எரித்த தந்தை
ADDED : ஜன 09, 2024 07:58 AM

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா, 19, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரை சேர்ந்த, பாஸ்கர் மகன் நவீன், 19, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்; பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.
திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிச., 31ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் திருமணம் செய்து, வீரபாண்டி அருகே, வாடகை வீட்டில் தங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ 'வாட்ஸாப்'பில் பரவியது. இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை, பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், கடந்த 2ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், 3ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, எரித்து விட்டதாக, நவீனுக்கு, நண்பர்கள் தெரிவித்தனர். இது குறித்து, வாட்டாடத்திக்கோட்டை போலீசில், நவீன் புகார் அளித்தார். நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் கிராமத்தில், போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஐஸ்வர்யாவின் தந்தையை தேடி வருகின்றனர்.
---
ரூ.2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் சரவணன் 32, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். உதவி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.
---
ஓசூர் கொலையில் 3 பேர் சரண்
ஓசூர்அருகே பேகேப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராஜ் 40. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், தீக் க்ஷிதா 10, என்றமகளும் உள்ளனர். இவர் கடையில் டீ குடித்த போது முகமுடி அணிந்து வந்த 3 பேர் கத்தியால் குத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில்போச்சம்பள்ளி முனிராஜ் மகன் கிரண் 22, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் 22, தேன்கனிக்கோட்டை கிருஷணமூர்த்தி மகன் மூர்த்தி 21 ஆகியோர் ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.
---
10 கிலோ நகை மோசடி: மேலாளர் கைவரிசை
கோவை, சிங்காநல்லுார் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் பெருமாள், 68, சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது கடையில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, ஆலவாயில் பகுதியை சேர்ந்த நந்தகோபால், 30, என்பவர் பணியாற்றினார். பெருமாளின் உறவினரான இவர், அடகு கடையில் மேலாளராக வேலை செய்தார்.
கடந்த, 1ல், தன் அடகு கடையில் பெருமாள் ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்கள், 415 பேர் அடகு வைத்திருந்த நகைகளை காணவில்லை. ஆனால், வேறு இடங்களில் அந்த நகைகளை அடகு வைத்திருப்பதற்கான ரசீதுகள் சிக்கின. இதுபற்றி, அஸ்தம்பட்டி போலீசில், பெருமாள் புகார் அளித்தார்; போலீசார் விசாரித்தனர்.
அடகு நகைகளை, வங்கியில் குறைந்த வட்டிக்கு நந்தகோபால் அடகு வைத்துள்ளதும், சில நகைகளை விற்பனை செய்ததும் தெரிந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பலர், தங்களின் நகைகளை மீட்டு சென்றது போல, போலியான ஆவணங்களை தயாரித்து, உரிமையாளர் பெருமாளை நம்ப வைத்துள்ளார். அதன் மூலம் மொத்தமாக, 10 கிலோ தங்க நகையை மோசடி செய்திருப்பது அம்பலமானது. அதன் மதிப்பு, 4.17 கோடி ரூபாய்.
இது தொடர்பாக நந்தகோபால் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரது வாக்குமூலத்தின்படி, முதல்கட்டமாக, 1.25 கிலோ தங்க நகையை போலீசார் மீட்டுள்ளனர்.
---
4 ஆண்டாக டூ-வீலர்களை திருடி விற்ற கும்பல் கைது
மதுரை நகரில் அடிக்கடி டூ-வீலர்கள் திருட்டு போயின. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா, ஏற்கனவே உள்ள திருடர்களின் பதிவேடு அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தர்ம முனீஸ்வரன், 20, ஹரிகிருஷ்ணன், 28, உட்பட ஐவரை கைது செய்து டூ-வீலர்களை மீட்டனர்.
---
விபத்தில் சிக்கியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு
திருச்சி, உறையூர் அருகே, ராமலிங்க நகரை சேர்ந்தவர் ஜாபர் உசேன், 38, தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர், நேற்று முன்தினம், கடைகளில் வசூலான 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக்கில், வாளாடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சென்ற போது, லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி, ஜாபர் உசேன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்தின் போது அங்கிருந்த சிலர், அவருக்கு உதவுவது போல நடித்து, ஜாபர் உசேன் வைத்திருந்த, 5 லட்சம் ரூபாயை திருடி சென்று விட்டனர். அவர்கள் மீது ஜாபர் உசேன் போலீசில் புகார் செய்தார். கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் திருடியவர்களை தேடி வருகின்றனர்.
---
ரூ.6 கோடி மோசடி
திருச்சி, காட்டூர் அருகே, ரோஷன் அரேபியன் ரெஸ்டாரென்ட் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் முகமது ரபீக், 45. இவருக்கு, பழக்கமான வசந்த் என்பவர் வாயிலாக, திருச்சி, புத்துார் பகுதியை சேர்ந்த முருகானந்தம், 40, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகமது நிஜாமுதீன், 38, ஆகியோர் அறிமுகமாகினர்.
இருவரும், 'குற்றாலத்தில் நட்சத்திர ஹோட்டல் கட்டினால் அதிகம் லாபம் சம்பாதிக்கலாம்' என, கூறினார். அதை உண்மை என நம்பிய முகமது ரபீக், பல தவணைகளாக, 6.10 கோடி ரூபாயை முருகானந்தம் மற்றும் நிஜாமுதீனிடம் கொடுத்தார்.
பணத்தை வாங்கிய அவர்கள், ரபீக்கை ஏமாற்றியதோடு, பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. முகமது ரபீக், போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் மற்றும் போலீசார், மோசடி செய்த முருகானந்தம், முகமது நிஜாமுதீன் உட்பட, 11 பேரை தேடி வருகின்றனர்.
---
மளிகை கடைக்காரர் கொலை: 4 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த மளிகை கடைக்காரர் திம்மராஜ், 40, கடந்த, 5ம் தேதி மாலை மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ஓசூர், சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வழக்கு ஒன்றில், அ.தி.மு.க., பெண் ஒருவருக்கு ஆதரவாக திம்மராஜ் சாட்சி சொல்லவில்லை என்ற கோபம் அந்த பெண்ணுக்கு இருந்தது.
அதுபோல, திம்மராஜ் மளிகை கடையில், அந்த பெண் நிறைய பாக்கி வைத்திருந்ததால், திம்மராஜ் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் மகன் தன் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, திம்மராஜை கொலை செய்தது தெரிந்தது.
இக்கொலையில் முக்கிய குற்றவாளியான அப்பெண்ணின் மகனான ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண், 22, மற்றும் ராஜ்குமார், 22, தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 21, ஆகிய, 3 பேர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
---
சிறுவனிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் கைது
திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதி பள்ளியில் 8ம் வகுப்பு பயின்றார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு செல்ல அந்த வழியே டூவீலரில் வந்தவரிடம் அழைத்து செல்ல கேட்டார். அந்த நபர் சிறுவனை ஏற்றிக்கொண்டார். ஆனால் டவுனுக்கு செல்லாமல் குலவணிகர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.
அங்கிருந்து தப்பிய சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுவனின் பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வக்கீல் செந்தில்குமார் என தெரிந்தது. அவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
---
சொத்துக்காக தாய் கொலை: மகன் கைது
துாத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மனைவி கலைச்செல்வி 67. இவரது மூத்த மகன் ரூபிசன் 40. திருமணமாகி மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
கலைச்செல்வி தனது வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டை தமக்கு தருமாறு ரூபிசன் கேட்டார்.கலைச்செல்வி மறுத்து விட்டார். ஆத்திரமுற்ற ரூபிசன், நண்பர் சூசை அந்தோணி என்பவருடன் வந்து கலைச்செல்வியுடன் தகராறில் ஈடுபட்டார். பின் தாயாரின் கழுத்தை நெரித்து தலையை சுவரில் அடித்து கொலை செய்தார். கலைச்செல்வியின் இளைய மகன் அந்தோணி டேரிசன் புகார் செய்தார். ரூபிசன், சூசைஅந்தோணியை போலீசார் கைது செய்தனர்.
---
5 நக்சல்கள் கைது
கர்நாடகாவில், துப்பாக்கி சூடு நடத்தி ஏழு போலீசாரை கொன்ற வழக்கில், 19 ஆண்டுகளுக்கு பின், பெண் உட்பட ஐந்து நக்சல்கள், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
---
நடிகர் யஷ் 'கட் அவுட்'டில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி
கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் யஷ். இவரது நடிப்பில் வந்த, கே.ஜி.எப்., படம் மாபெரும் வெற்றி பெற்றது. நேற்று இவரது பிறந்த நாள். இதற்காக, மாநிலத்தின் பல இடங்களில் ரசிகர்கள் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர்.
கதக் மாவட்டம், லட்சுமேஷ்வராவின் சூரனகி கிராமத்தின் அம்பேத்கர் நகரில், ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிஅளவில், யஷ்ஷின் 25 அடி உயர கட் அவுட்டை கட்டிக் கொண்டிருந்தனர். கட் அவுட்டை கட்ட இரும்பு கம்பியை பயன்படுத்தியபோது, உயரே இருந்த மின் கம்பியில் இரும்பு கம்பி உராய்ந்தது.
இதில், மின்சாரம் பாய்ந்ததில் ஹனுமந்தா, 21, முரளி, 20, நவீன், 21, ஆகிய மூன்று ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில், படப்பிடிப்பில் யஷ் இருந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த அவர், சிறப்பு விமானத்தில் நேற்று மாலை 4:00 மணியளவில், ஹூப்பள்ளி வந்திறங்கினார். உயிரிழந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு யஷ் ஆறுதல் கூறினார்.