ADDED : செப் 20, 2024 08:28 PM
சென்னை:வெளியுறவு அமைச்சக அலுவலகங்களில், குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில், தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பில், ஹிந்தி, சமஸ்கிருத மொழி சார்ந்த அறிவு, விரும்பத்தக்க தகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து, அதை நீக்கும்படி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.
அதற்கு, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அளித்துள்ள பதில்:
நீங்கள் குறிப்பிட்ட மத்திய அரசு விளம்பரத்தில், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் உள்ளது. கட்டாயம் ஹிந்தி தேவை என சொல்லப்படவில்லை. இதில் எங்கே ஹிந்தி திணிப்பு உள்ளது. எழுத்தாளரான உங்களுக்கு, தேவைக்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும்.
மக்களின் உணர்ச்சியை துாண்டி குளிர்காய்ந்த காலம் மலையேறி விட்டது. தமிழ் பயிற்றுவிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழி தெரிந்திருந்தால், கூடுதல் சிறப்பு என்றும் சொல்லப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக அல்லது அலுவல் ரீதியாக தேர்வு செய்யப்படும் நபர், துாதரக வேலைக்கும் நியமிக்கப்படுவார் என குறிப்பு உள்ளது. இப்படி வேலை தரும்போது, அவருக்கு ஹிந்தி தெரிந்திருந்திருந்தால் நல்லது தானே. அந்த அடிப்படையில் தான் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தோழரை, நீங்கள் கேரளாவுக்கு பணி செய்ய அனுப்புவீர்களா? இல்லை, தமிழ்கூட மலையாளமும் தெரிந்த நபரை அனுப்புவீர்களா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.