தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்; அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்; அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2025 12:17 PM

ராமநாதபுரம்: 'அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில், சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பூரண மதுவிலக்கு என்பது எங்களது கொள்கை அல்ல. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் மதுக்கடைகளை குறைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. மத்திய அரசு தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல் இந்திய மீனவர்கள் என்ற பார்வையை மாற்றிக்கொண்டு நிர்வாக ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பது என்பது மீனவர் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது.
அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பென்ஷன் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவை ரத்து செய்து, ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.
த. வெ. க., தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏதோ பிரதிபலனை எதிர்பார்த்து பா.ஜ., அரசு செய்திருக்கிறது. பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு தொடர்ந்து அதிகாரிகளால் ஆய்வு என்ற பெயரில் தாமதப்படுத்தி வருகின்றனர். பாம்பன் பாலத்தை திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.