கும்பகோணத்தில் மாசிமக திருவிழா மதுக்கடைகளை மூட வழக்கு
கும்பகோணத்தில் மாசிமக திருவிழா மதுக்கடைகளை மூட வழக்கு
ADDED : பிப் 15, 2024 09:16 PM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கும்பகோணத்தில் சிவன், விஷ்ணு கோவில்கள் உள்ளன. இங்கு பிப்., 24ல் மாசிமக திருவிழா நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகம் கூடுவர். முன்னோர்களுக்கு மகாமக குளத்தில் தர்ப்பணம் செய்து, புனித நீராடுவர். கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறும்.
ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு 2023 மே 10ல் அரசாணை பிறப்பித்தது.
பக்தர்கள் நலன் கருதி கும்பகோணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பிப்., 24ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி தஞ்சாவூர் கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: தமிழக அரசிடம் வழக்கறிஞர் விபரம் பெற்று பிப்., 20ல் தெரிவிக்க உத்தரவிட்டனர்.