'ஒப்பந்த செவிலியருக்கு மகப்பேறு சலுகை மூன்று மாதங்களில் பரிசீலிக்க வேண்டும்'
'ஒப்பந்த செவிலியருக்கு மகப்பேறு சலுகை மூன்று மாதங்களில் பரிசீலிக்க வேண்டும்'
ADDED : அக் 22, 2024 11:53 PM
சென்னை:மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் கோரிய ஒப்பந்த செவிலியர்களின் விண்ணப்பங்களை, மூன்று மாதங்களில் பரிசீலித்து பைசல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக, தேசிய ஊரக சுகாதார மிஷன் என்ற திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள், பார்மசிஸ்ட் உள்ளிட்டவர்களை மாநில அரசு நியமித்து கொள்ள, மத்திய அரசு நிதி உதவி வழங்கும். அவர்களுக்கான சம்பளம் வழங்க, இந்த நிதியை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ளும்.
தமிழக அரசு, 11,000க்கும் மேற்பட்ட செவிலியர்களை தேர்வு செய்து, தொகுப்பூதியமாக, 7,000 ரூபாய் முதலில் வழங்கியது. பின், நீதிமன்ற உத்தரவால், இந்த தொகை, 14,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் செவிலியர்கள், தங்களுக்கு, 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க கோரினர். ஒப்பந்த முறையில் இவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், மகப்பேறு சலுகை வழங்க, தமிழக அரசு மறுத்து விட்டது.
இதையடுத்து, தேசிய ஊரக சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் செவிலியர்களுக்கு, மகப்பேறு சலுகைகள் வழங்கக்கோரி, 'எம்.ஆர்.பி., நர்சஸ் எம்பவர்மென்ட் அசோசியேஷன்' சார்பில், உயர் நீதிமன்றத்தில், 2018ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பத்மாவதி ஆஜரானார்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மகப்பேறு சலுகை வழங்க மறுத்தோ, குறைவான சலுகை வழங்கியோ விதிக்கப்படும் ஒப்பந்த நிபந்தனைகளை விட, மகப்பேறு சலுகை சட்டப்பிரிவுகளே மேலோங்கி நிற்கும்.
எனவே, மகப்பேறு சலுகை வழங்க மறுக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது.
மகப்பேறு சலுகை கோரி, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசிய ஊரக சுகாதார மிஷன் செவிலியர்கள் அளித்த விண்ணப்பங்களை, மூன்று மாதங்களில் பரிசீலித்து பைசல் செய்ய வேண்டும்.
புதிய விண்ணப்பங்கள் என்றாலும், அதைப் பெற்ற தேதியில் இருந்து, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

