பொய் சொல்லலாம்; பழனிசாமி அளவுக்கு சொல்லக்கூடாது: ஸ்டாலின் கிண்டல்
பொய் சொல்லலாம்; பழனிசாமி அளவுக்கு சொல்லக்கூடாது: ஸ்டாலின் கிண்டல்
ADDED : நவ 10, 2024 12:22 PM

விருதுநகர்: ' பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். அவர் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி இருப்பதாக உளறி இருக்கிறார். அதை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகரில் 7.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.7.12 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: வீட்டு விளக்காக இருப்பேன். நாட்டிற்கு தொண்டனாக இருப்பேன். மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். சில நாட்களுக்கு முன், இந்தியாவின் புகழ்பெற்ற இண்டியா டுடே பத்திரிகையில் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெருமையும், புகழையும் வழங்கியது தமிழக மக்கள் தான். நமக்கு பின்னாடி, நம்மளை முந்தி வெற்றி பெற வேண்டும் என பல பேர் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
வேகமாக ஓடணும்
இன்னும் வேகமாக ஓட வேண்டும் என நான் நினைக்கிறேன். மாவட்டம் தோறும் கள ஆய்வுகளை நடத்தி கொண்டு இருக்கிறேன். இது குறித்து எதுவும் புரியாத, ஆட்சி பொறுப்பில் இருந்த போது, மக்களின் நினைத்து கவலைப்படாத, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொல்கிறார், மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி இருப்பதாக உளறி இருக்கிறார். அதை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.
ஏக்கர் கணக்கில் பொய்
ஒருத்தர் பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக் கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அதனை இனிமேல் கொஞ்சம் மாற்றி, பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என இப்போம் சொல்லலாம். அந்த அளவுக்கு, பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். மக்கள் நலனுக்காக நாம் செய்து வரும் மூலதன செலவுகள் என்னென்ன? எளிய மக்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன ? என்பது குறித்து இதே மேடையில் மணி கணக்கில் என்னால் சொல்ல முடியும். நான் கேட்கிறேன். நீங்கள் எதனை மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் என்று சொல்கிறீர்கள்.
தோல்விகள்
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு மைதானம் உள்ளிட்ட பல திட்டங்களை வேண்டாம் என்று சொல்கிறீர்களா? இப்படி வாய் துடுக்காகவும், ஆணவத்துடனும் பேசி, பேசி தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழக மக்கள் இனிமேல் உங்களை தோற்கடித்து கொண்டுதான் இருப்பார்கள். அது உறுதி. நான் கேட்கிறேன் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழகத்தை காக்க ஓய்வின்றி உழைத்தார். கருணாநிதி பெயரை மக்கள் திட்டங்களுக்கு வைக்காமல் யாருடைய பெயரை வைக்கிறது.
கரப்பான் பூச்சி
பதவி சுகத்திற்காக, கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போனீர்களே, உங்க பெயரை வைக்க முடியுமா? என்ன பேசுகிறீர்கள். கருணாநிதி என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். கருணாநிதி தான் தமிழகத்தினை காக்க கூடிய காவலரன். அவரது கொள்கைகள், சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறேன். என்னை பொறுத்த வரையில் என்றும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக, வாழ்கைக்கும் வளர்ச்சிக்கும் சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விருதுநகருக்கு இன்று முதல்வர் அறிவித்த திட்டங்கள்!
* அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் சிப்காட் தொழில் வளாகம்; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* விருதுநகரில் ரூ.24.50 கோடி செலவில் சாலை, மழை நீர் வசதிகள் மேம்படுத்தப்படும்; ரூ.15 கோடியில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை அமைக்கப்படும்.
* அருப்புக்கோட்டை மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும்.
* பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும்.
இதற்காக, கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும்.
* காரியாபட்டியில் ரூ.21 கோடியில் புதிய அணை; விவசாயிகளின் நலன் கருதி கண்மாய்கள், ரூ.35.1 கோடியில் மேம்படுத்தப்படும்.
* கவுசிகா ஆறு, உள்ளிட்ட நீர் நிலைகள் ரூ.41 கோடியில் சீரமைக்கப்படும்; காலிங்கப்பேரி உட்பட 4 அணைகள் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்டு, ரூ.2.74 கோடி மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்படும்.