'சென்னையை போன்ற வளர்ச்சியை வடகிழக்கு மாநிலங்கள் பெறட்டும்'
'சென்னையை போன்ற வளர்ச்சியை வடகிழக்கு மாநிலங்கள் பெறட்டும்'
ADDED : பிப் 06, 2025 01:16 AM

சென்னை: ''சென்னையை போன்ற வளர்ச்சியை, வடகிழக்கு மாநிலங்களும் பெற வேண்டும். அதற்கு அங்கு முதலீடு செய்ய வாருங்கள்,'' என, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வடகிழக்கு மாநிலங்களுக்கான, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது.
இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில், முதலீடுகள் செய்வதால் கிடைக்கும், வருவாய் மற்றும் வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மாநாட்டில், மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:
வளர்ச்சி அடைந்த பாரதமாக, 2047 க்குள் இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தொழில் முனைவோரை ஈர்ப்பதற்கான, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளை, மத்திய அரசு செய்து வருகிறது.
சென்னை நகரம் மிக அழகானது. இந்தியாவை மற்ற நாடுகளுக்கு பிரதிபலிக்கும் ஓர் இடமாக, சென்னை உள்ளது.
நவீன உலகின் தொழில்நுட்பம் மற்றும் உள் கட்டமைப்புகளை, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, சென்னை உள்ளது.
நவீன சென்னையில், ஐ.டி., துறைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. மெட்ரோ போக்குவரத்து, விமான போக்குவரத்து என, அனைத்திலும் முதலில் திகழ்கிறது.
இங்குள்ளதைப் போன்ற வளர்ச்சியை, வடகிழக்கு மாநிலங்களும் பெற வேண்டும். அதற்கு முதலீடுகள் அதிகம் தேவை. வடகிழக்கு மாநிலங்களை, அஷ்டலட்சுமி மாநிலங்களாகவே, பிரதமர் மோடி பார்க்கிறார். வங்கியில் பணம் வைத்திருந்தால் மட்டுமே வளர்ச்சி என, சொல்லி விட முடியாது. அதற்கு ஒவ்வொரு தொழில் முனைவோரின் பங்களிப்பும் அவசியமானது.
சென்னை கிழக்கு கடற் கரை சாலையில் செயல்படும் ஐ.டி., நிறுவனங்கள், 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றன. டிஜிட்டலுக்கு மாறுதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி, கணிசமாக அதிகரிக்க துவங்கி உள்ளன. திறமை உள்ளவர்கள் பலர் இங்குள்ளதால், தளவாடங்களிலும் சென்னை இன்றியமையாததாக உள்ளது.
சென்னை வளர்ச்சியை போல், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதது. எனவே, இங்கு முதலீடு செய்வது போல், வடகிழக்கு மாநிலங்களிலும் முதலீடு செய்ய வாங்க. கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில், முதலீடு செய்துள்ளது. விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில், விமான நிலையங்கள் ஒன்பது இருந்தன; தற்போது, 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வெறும் 950 ஆக இருந்த விமான போக்குவரத்து நகர்வுகள், இன்று 2,000 ஆக உயர்ந்துள்ளன.
ரயில்வே பணிகள், 18,000 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன. எனவே மற்ற நகரங்களில் இருந்து, இங்கு முதலீடு செய்தால், அம்மாநிலங்கள் நல்ல வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.