ADDED : ஆக 16, 2025 01:49 AM

சென்னை:முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த சுதந்திர தின விழாவை பாதியில் நிறுத்தி, மீண்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு பின், மேயர் பிரியா விழாவை துவக்கியது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று சுதந்திர தின விழா நடந்தது. மாநகராட்சி மேயர் பிரியா தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ --- மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழா நடந்து கொண்டிருக்கும்போது, முதல்வர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக்கூறி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வை, மேயர் பிரியா ஒத்திவைத்தார்.
பின்னர் மேயர் பிரியா, முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு துாய்மைப் பணியாளர்கள், முதல்வரை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒன்றரை மணி நேரத்திற்கு பின், ரிப்பன் மாளிகை வந்தார். மீண்டும் சுதந்திர தின விழா துவங்கியது.
அதிக சொத்துவரி செலுத்திய மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்கள், உரிய காலத்தில் சொத்துவரி செலுத்திய மூன்று பேர் ஆகியோருக்கு, பாராட்டு கடிதம் வழங்கினார். பின், சிறப்பாக பணியாற்றிய, 171 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
விழா பாதியில் நிறுத்தப்பட்டதால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக, பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், முறையாக சொத்து வரி செலுத்தியோர், மேயர் பிரியா வருகைக்காக காத்திருந்தனர்.
சுதந்திர தின விழாவை, சாதாரண நிகழ்ச்சி போல் மேயர் நடத்தியது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் கடந்த ஆண்டு, அவர் குடியரசு தின விழாவில், மொபைல் போனில் பேசியபடி, சான்றிதழ்களை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

