ADDED : அக் 17, 2025 02:15 AM
சென்னை: அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை இணையதளம் திடீரென முடங்கியதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
நாடு முழுதும், மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பு, அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான 'கவுன்சிலிங்' ஆன்லைனில் நடந்து வருகிறது. தற்போது, இரண்டு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று கவுன்சிலிங், விருப்ப கல்லுாரிகள் தேர்வு நடந்தது. புதிய இடங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அவற்றை தேர்வு செய்யவும், ஏற்கனவே பெற்ற இடங்களை மாற்றிக் கொள்ளவும், மாணவ, மாணவியர் ஆர்வம் காண்பித்தனர்.
இதற்கான அவகாசம் நேற்று நள்ளிரவு நிறைவடைவதாக இருந்தது.
அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர், நாடு முழுதும் பதிவு செய்தததால், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், அகில இந்திய ஒதுக்கீடு விருப்ப கல்லுாரிகள் தேர்வு செய்வதற்கான, https://mcc.nic.in என்ற இணையதளம் முடங்கியது. இதனால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இணையதளம் முடக்கம் காரணமாக, விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்ய, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது, மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளது.

