விருதுநகரில் போட்டியிட விருப்பமில்லை ம.தி.மு.க., துரை 'பளிச்'
விருதுநகரில் போட்டியிட விருப்பமில்லை ம.தி.மு.க., துரை 'பளிச்'
ADDED : பிப் 21, 2024 05:31 AM
மதுரை : ''லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை,'' என, மதுரையில் ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை கூறினார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு திருநெல்வேலி, துாத்துக்குடியில் வெள்ளத்தால் பாதித்தோருக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. ஒன்பது ஆண்டுகளாக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
'இண்டியா' கூட்டணி சார்பில் பா.ஜ., 9 ஆண்டு காலத்தில் செய்ததையும், செய்யாததையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பத்திரிகை கணிப்புகளில் 300 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதையும் மீறி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என பிரதமர் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்படுத்துவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பிப்., 23 ல் பழைய ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தலை நடத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் நடத்தும் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்.
அதை நடைமுறைப்படுத்தவே நாங்களும் விரும்புகிறோம். எங்களுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் தலா ஒரு சீட் ஒதுக்குவதாக பேச்சுவார்த்தையில் முடிவாகி உள்ளது. இதை உறுதிப்படுத்த தி.மு.க., தலைமை, ம.தி.மு.க., நிர்வாகிகள் அறிவிப்பர்.
நான் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் கட்சியை மீறி நான் எதுவும் செய்ய முடியாது.
கட்சித் தலைமை வற்புறுத்தினால் உறுதியாக தேர்தலில் நிற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
பூமிநாதன் எம்.எல்.ஏ., தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மார்நாடு, ஜெயராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

