மருத்துவ சான்றிதழ் படிப்பு: 46 சதவீத இடங்கள் காலி: ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு
மருத்துவ சான்றிதழ் படிப்பு: 46 சதவீத இடங்கள் காலி: ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு
ADDED : டிச 03, 2025 07:17 AM

சென்னை: தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 5,944 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, முதல் கட்ட மாணவர் சேர்க்கை, மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் நடந்தது.
இதில், 1,316 இடங்கள் மட்டும் நிரம்பின. அதேநேரம், 4,628 மருத்துவ இடங்கள் நிரம்பாததால், மாவட்ட நிர்வாகங்கள் உதவியுடன், அந்தந்த மருத்துவ கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.
கல்லுாரிகள் முயற்சித்தபோதும், மாணவ - - மாணவியர் சேர்க்கை குறைவாகவே காணப்பட்டது. இதற்காக இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நவ., 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், 2,735 இடங்கள் என, 46 சதவீத இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்நிலையில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆர்வம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய, மருத்துவ கல்வி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ சான்றிதழ் படிப்பு இடங்களில், 46 சதவீதம் நிரம்பாமல் இருப்பது குறித்து, பல்வேறு வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
'இப்படிப்பின் தரத்தை உயர்த்துதல், படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்தல் போன்றவை தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்கப் படும். இதற்கான அறிக்கை, ஓரிரு மாதங்களில் அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.

