அரசு கல்லுாரிகளில் டாக்டர்களின் வருகைப்பதிவில் முறைகேடு; மருத்துவ கவுன்சில் கண்டனம்
அரசு கல்லுாரிகளில் டாக்டர்களின் வருகைப்பதிவில் முறைகேடு; மருத்துவ கவுன்சில் கண்டனம்
ADDED : ஜூலை 10, 2025 07:29 AM

மதுரை: தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பணிபுரியும் டாக்டர்களின் வருகைப்பதிவில் முறைகேடு இருப்பதாக தமிழக அரசுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி.,) கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு டாக்டர்களின் வருகைப்பதிவு தொடர்பாக வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வழக்கு தொடுத்த போது 'டாக்டர்கள் காலை, மாலை வேளையில் 'பயோமெட்ரிக்' முறையில் வருகையையும் புறப்படுவதையும் பதிவு செய்தால் மட்டும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் இரு வேளையும் வருகைப்பதிவு செய்யாத நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2020 ம் ஆண்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் இந்த உத்தரவை அமல் நடத்த வேண்டிய மருத்துவக் கல்வி இயக்கமும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் இன்று வரை அமலாக்கவில்லை என்று தேசிய மருத்துவ கவுன்சில் கடிதம் வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் உள்ளதாவது: அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் பலர் பணிக்கே வராமல் இருந்தது 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவேட்டின் மூலம் தெரிய வந்துள்ளதால் மருத்துவக் கல்வியின் தரத்தையும், மருத்துவக் கல்லுாரிகளின் மீதான நம்பிக்கையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லுாரிகளின் முதல்வர்களிடம் விளக்கம் கேட்டு அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு, கவுன்சில் 'ஷோ காஸ்' நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீஸ் அடிப்படையில் சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநரிடம் விளக்கம் கேட்டதோடு அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் விளக்கம் கேட்டு மருத்துவக் கல்லுாரி இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.