மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு; ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்
மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு; ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்
ADDED : அக் 22, 2024 02:36 AM

சென்னை : நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை கோரும் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுஉள்ளது.
சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்தார். இவரை, 1996ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக 1 லட்சம் ரூபாயும் விதித்து, 1998ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜான் டேவிட்டை விடுதலை செய்து, 2001 அக்டோபர் 5ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காவல் துறை மேல்முறையீடு செய்தது.
கடலுார் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 2011 ஜன., 20ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜான் டேவிட் மீண்டும் சிறை சென்றார்.
இந்நிலையில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் தாய் டாக்டர் எஸ்தர் மனு தாக்கல் செய்தார்.
மனு விபரம்:
மகன் ஜான் டேவிட் 10 ஆண்டுகள் வெளியில் இருந்த போது, உளவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்; ஊட்டச்சத்து படிப்பையும், எம்.பி.ஏ., பட்டப் படிப்பையும் முடித்து விட்டார்.
வெளியில் இருந்த காலத்தில், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை; அமைதியாக வாழ்ந்தார்.
தற்போது, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய, அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ல் அரசாணை பிறப்பித்தது.
கடந்த ஆண்டு வரை, 16 ஆண்டு 11 மாதம் சிறையில் இருந்துள்ளார். அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து தகுதிகள் இருந்தும், மகனை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார்.
கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய, அவரின் குற்றச் செயல்களை பார்க்கக் கூடாது.
தற்போது அவர் திருந்தி, நல்ல எண்ணத்துடன் அமைதியாக வாழ்கிறாரா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். எனவே, என் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன் ஆஜராகி, ''ஜான் டேவிட் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. நாவரசு கொலை வழக்கில் அவர் கைதான போது, 18 வயது தான்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து, அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறோம்' என உத்தரவிட்டனர்.