நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்
UPDATED : டிச 19, 2024 04:51 PM
ADDED : டிச 19, 2024 04:49 PM

திருநெல்வேலி: நெல்லையில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர்(51), மாயாண்டி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கழிவுகளை கொட்டியதும், இதற்கான இடங்களை இவர்கள் அடையாளம் காட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

