மருத்துவ மசோதாவால் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு: டாக்டர்கள் அதிருப்தி
மருத்துவ மசோதாவால் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு: டாக்டர்கள் அதிருப்தி
ADDED : பிப் 28, 2024 06:54 AM

சென்னை : தமிழக அரசின் மசோதாவால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படுவதுடன், டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தலைவராக முடியாத சூழல் உருவாகியுள்ளது என, முன்னாள் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயல்படுகிறது. மருத்துவம் படித்த, 1.80 லட்சம் பேர் கவுன்சிலில் பதிவு செய்து, டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவ கவுன்சிலின், 10 உறுப்பினர்களில் ஏழு பேர் தேர்தல் வாயிலாகவும், மூன்று பேர் சென்னை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் இருந்தும் தேர்வு செய்யப்படுவர்.
மருத்துவ கவுன்சிலில், சில முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தலைமையிலான குழுவினர், மருத்துவ கவுன்சிலை தற்காலிகமாக நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு புதிய மசோதாவை, அரசு தாக்கல் செய்து உள்ளது. அதில், 20 உறுப்பினர்களுடன், கவுன்சில் செயல்படும்; அவர்களில், 11 பேர் அரசால் நியமிக்கப்படுவர்; ஒன்பது பேர் டாக்டர்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

