முதல்வர் மருந்தகங்களில் வாடிக்கையாளர் கேட்கும் மருந்துகள் இனி கிடைக்கும்
முதல்வர் மருந்தகங்களில் வாடிக்கையாளர் கேட்கும் மருந்துகள் இனி கிடைக்கும்
ADDED : ஜூலை 26, 2025 11:25 PM

சென்னை:முதல்வர் மருந்தகங்களில், வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்து, மாத்திரைகள் இல்லை என்றால், அவற்றை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்களை, கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு துவக்கியது.
இதில், 462 மருந்தகங்களை தனியார் தொழில் முனைவோரும், 563ஐ கூட்டுறவு சங்கங்களும் நடத்துகின்றன.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள், 'ஜெனரிக்' மருந்துகள் உள்ளிட்டவை வெளிச்சந்தையை விட, 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக, அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர்கள் கேட்கும் பல மருந்துகள் கிடைப்பதில்லை என்ற, புகார்கள் எழுகின்றன.
இந்த மருந்தக செயல்பாடு தொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், சென்னையில் நேற்று முன்தினம் மண்டல இணை பதிவாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் மருந்தகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகள் இல்லை என்றால், 'இல்லை' என்று திருப்பி அனுப்பக் கூடாது. அவற்றை, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனரிக் மருந்துகளை அதிகம் விற்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் குறித்து ரேஷன் கடைகள், கூட்டுறவு வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என, இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

