டில்லி மன நல மருத்துவமனையில் மீரா மிதுன் அட்மிட்: போலீசார் தகவல்
டில்லி மன நல மருத்துவமனையில் மீரா மிதுன் அட்மிட்: போலீசார் தகவல்
ADDED : ஆக 12, 2025 03:22 AM

சென்னை: 'டில்லியில் உள்ள மனநல மருத்துவமனையில், நடிகை மீரா மிதுன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதால், அவரை ஆஜர்படுத்த முடியவில்லை' என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன்,34, பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டார்.
இதுகுறித்த புகாரில், 2021ம் ஆண்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகவில்லை.
இதையடுத்து, 2022ம் ஆண்டில் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'டில்லியில் சுற்றி திரிந்த மீரா மிதுன் மீட்கப்பட்டு, அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, டில்லி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, ''டில்லியில் உள்ள மன நல மருத்துவமனையில், மீரா மிதுன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல் நல பிரச்னையால், நீதிமன்ற உத்தரவை தனிப்படை போலீசார் நிறைவேற்றவில்லை.
'உடல் நலம் தேறி, பயணத்துக்கு தகுதியானவர் என, டில்லி டாக்டர்கள் சான்றளித்ததும், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,'' எனக்கூறி, விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். இதைப்பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.