ADDED : ஜன 19, 2024 11:07 PM
சென்னை:ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு, நிர்வாக உறுப்பினராக தகுதியுடைய நபர்கள், பிப்., 12க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த, மாநில அளவிலான ஆணையம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2017ல் உருவாக்கப்பட்டது.
இதில், மேல் முறையீட்டு தீர்ப்பாயமானது, தலைவர், நீதித்துறை உறுப்பினர், நிர்வாக உறுப்பினர் மற்றும் பதிவாளருடன் இயங்கி வருகிறது.
இதில், தீர்ப்பாயத்தில் நிர்வாக உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், சட்டத்துறை செயலர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதிகள் உள்ளனர்.
இக்குழு எடுத்த முடிவுகள் அடிப்படையில், நிர்வாக உறுப்பினர் தேடலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில், குறைந்தபட்சம், 20 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். இந்த அனுபவம் உள்ளவர்களில், 62 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள், பிப்., 12க்குள் வந்து சேர வேண்டும். இது தொடர்பான அறிவிக்கையை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ளார்.