சீருடையில் கேமரா அணியாத டிராபிக் போலீசாருக்கு 'மெமோ'
சீருடையில் கேமரா அணியாத டிராபிக் போலீசாருக்கு 'மெமோ'
ADDED : ஜன 25, 2024 06:52 AM

சென்னை : 'சீருடையில் கேமரா பொருத்தாத போலீசாருக்கு மெமோ கொடுக்க வேண்டும்' என, ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரிடம் தவறை மறைத்து மல்லுகட்டுகின்றனர். போலீசாரும் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு முறைப்படி அபராதம் விதிப்பது இல்லை. சாலைகளில், 'சிசிடிவி' இல்லாத மறைவிடங்களில் நின்று, பாய்ந்து சென்று வாகனங்களை மடக்குகின்றனர். அபராதம் விதிக்காமல் வசூல் நடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதை தடுக்க, சென்னை, மதுரை, திருச்சி, கோவை என, பெரு நகரங்களில் உள்ள, ஒரு காவல் நிலையத்திற்கு தலா, நான்கு கேமராக்கள் தரப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கேமரா விலும், எட்டு மணி நேர பேட்டரி பேக் அப், 32 ஜிபி ஸ்டோரேஜ் கார்டு உள்ளது. இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், பெரும்பாலான போலீசார், கேமராக்களை இயக்குவது இல்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல ஐ.ஜி.,க்கள், கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அவர்களின் சுற்றறிக்கை:
வாகன சோதனையில் எத்தனை போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனர்; அவர்களில் யார் யாரெல்லாம் சீருடையில் கேமரா அணிந்துள்ளனர் என்ற விபரத்தை, அந்தந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேமரா பழுதாகி விட்டது; இயக்கத் தெரியவில்லை என, எவ்வித காரணமும் கூறக்கூடாது.
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், கேமராவை அணைத்து விட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடுவது தெரியவருகிறது. இதனால், கேமரா, 'ஆன்' செய்யாத போலீசாருக்கு, சம்பளம் மற்றும் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் வகையில், கமிஷனர் மற்றும்எஸ்.பி.,க்கள் 'மெமோ' தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.