மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; பின்னணியில் கஞ்சிபாணி இம்ரான்
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; பின்னணியில் கஞ்சிபாணி இம்ரான்
ADDED : ஜன 09, 2025 02:07 AM

சென்னை: தமிழகத்தில், மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை, அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசார் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் இணைந்து, மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, 15 பேரை, சமீபத்தில் கைது செய்தனர்.
கடத்தல் பின்னணி
அவர்களிடம் இருந்து, 5 நாட்டுத் துப்பாக்கிகள், 79 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், துாத்துக்குடியைச் சேர்ந்த, கூலிப்படை கும்பல் தலைவன் தம்பிராஜா, 60, என்பவர், தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ரவுடிகளுக்கு, பீஹார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் கட்டா என்ற நாட்டுத் துப்பாக்கிகளை விற்றது தெரியவந்தது.
கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தம்பிராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர் விசாரணையில், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், இலங்கையைச் சேர்ந்த, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் இருப்பது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
தனிப்படை போலீசார் கூறியதாவது:
கஞ்சிபாணி இம்ரான், நிழல் உலக தாதா போல செயல்பட்டு வருபவர். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இலங்கைக்கு மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருளை கடத்தி வந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதில் கில்லாடி.
துபாயில் நட்சத்திர ஹோட்டலில், கூட்டாளி மாகந்துரே மதுாஷ் உடன் தங்கி இருந்தபோது, 2019, மார்ச் 28ல், இலங்கை போலீசார் பிடித்து வந்து, தங்கள் நாட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின், சமீபத்தில் கஞ்சிபாணி இம்ரான் வெளியே வந்துள்ளார்.
சென்னையில் கைதான நபர்களுக்கு, துப்பாக்கி கொடுத்தால் போதைப்பொருள் தருவது என்ற ஒப்பந்த அடிப்படையில், மெத் ஆம்பெட்டமைன் வினியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.