மேட்டுப்பாளையம் இரட்டை கொலை: குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிப்பு
மேட்டுப்பாளையம் இரட்டை கொலை: குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிப்பு
ADDED : ஜன 29, 2025 05:41 PM

கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த தம்பியையும், அவரது மனைவியையும் கொலை செய்த வழக்கில், வினோத்குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 22. இதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா, 17, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜூன் 28 தேதி, காதல் திருமண ஜோடியை, கனகராஜின் அண்ணன் வினோத் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வினோத், 25, அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, கோவை எஸ்சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை மேற்கொண்டது. குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, வினோத்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என்றும், மற்ற மூவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், இன்று (ஜன.,29) வினோத் குமாருக்கு நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவித்தது. அதன்படி, வினோத்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.