ADDED : டிச 08, 2024 07:39 AM
சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இந்த அணை வாயிலாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் தீர்க்கப்படுகிறது.
நடப்பாண்டு குறுவை பாசனத்திற்கு ஜூலை 29ம் தேதி நீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, சம்பா பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர்.
கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து குறைந்ததால், அணையின் நீர் இருப்பும் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால், பாசன தேவை பூர்த்தியாகி வருகிறது. அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர் இருப்பும், 86 டி.எம்.சி., யாக உயர்ந்துள்ளது.
இந்த நீரை வைத்து, அடுத்தாண்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம்.