நடுவானில் விமானத்தில் சண்டை: வெடிகுண்டுகள் உள்ளதாக மிரட்டல்
நடுவானில் விமானத்தில் சண்டை: வெடிகுண்டுகள் உள்ளதாக மிரட்டல்
ADDED : ஜன 27, 2025 03:32 AM
சென்னை: சென்னை அருகே, நடுவானில் பறந்த விமானத்தில், கேரளா, அமெரிக்காவை சேர்ந்த இருவர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, வெடிகுண்டுகளை வீசப் போவதாக மிரட்டல் விடுத்ததால், பயணியர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து, நேற்று முன் தினம், 171 பயணியருடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது.
சென்னை அருகே, நடுவானில் விமானம் பறந்த போது, கேரளாவை சேர்ந்த டேவீஸ், 35, அமெரிக்காவை சேர்ந்த கஸன்எலியா, 32, ஆகியோர் இடையே, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அத்துடன் தங்களிடம் இருக்கும் வெடிகுண்டுகளை வீசுவோம் என, மிரட்டல் விடுத்தனர். இதனால், மற்ற பயணியர் கதி கலங்கினர்.
இது குறித்து, விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், நடுவானில் நடக்கும் ரகளை குறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உஷார்படுத்தப்பட்டனர். நள்ளிரவு 12:00 மணியளவில், விமானம் தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். தாக்கிக் கொண்ட பயணியரின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அவர்களிடம், வெடிகுண்டுகள் ஏதும் இல்லை. மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என, தெரியவந்தது.
சோதனை முடிய, அதிகாலை, 2:30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதனால், மற்ற பயணியர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகள், ரகளையில் ஈடுபட்ட பயணியர் இருவரையும், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.